Home » » இயற்கை முறை பால் பண்ணை

இயற்கை முறை பால் பண்ணை
தற்காலத்தில் சுத்தமான பசும்பால் வேண்டும் என்றால் நிச்சயம் நகரங்களில் கிடைக்காது. கிராமங்களில் இன்றும் நம் கண்முன்னே பசு மாட்டில் பால் கறந்து வாங்கலாம். அந்தப் பாலைத் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டாலே, உடம்பில் தெம்பும், பலமும் தெரியவரும். பால் வளத்தில் இந்தியா உலக அளவில் ஏழாவது இடத்திலிருந்து முதலாவது இடத்திற்கு முன்னேறிவிட்டது. ஆனாலும் நல்ல சுத்தமான, கலப்படமில்லாத பால் கிடைப்பது என்பது அரிதாகிவிட்டது.  தஞ்சாவூர் பகுதிகளில் பனங்கற்கண்டு பால் மிகவும் பிரபலம். மும்பை உள்ளிட்ட வடமாநிலப் பகுதிகளில் தூத்வாலா என பாலுக்கு என தனியே கடை உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை தனியே பாலுக்கு என கடைகள் இல்லை. இந்த நிலையில், கிராமங்களில் கிடைக்கும் சுத்தமான பசும்பால் போலவே, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஜி.மா. பால்பண்ணையில் சுத்தமான, பசும்பால் கிடைக்கிறது. சிவகாசி அருகே பள்ளபட்டி கிராமத்தில் சுமார் 2.25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த பால் பண்ணையில் சுமார் 60 பசுமாடுகள் உள்ளன. இந்தப் பண்ணையை அமைத்துள்ளவர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜி.மதுரா தாஸ்சர்மா என்பவர்.. இவரது பால்பண்ணை குறித்து அவரிடம் கேட்டபோது:  உங்களது பால் பண்ணையின் சிறப்பு என்ன?  நாங்கள் மாடுகளுக்கு சோள மாவு 60 சதம், மீதமுள்ள 40 சதம் மினரல், கால்சியம், உப்பு உள்ளிட்ட சத்துகள் அடங்கிய இயற்கை சத்து மாவை, மாடுகளுக்கு உணவு தயாரிக்கும் நிறுவனங்களில் இருந்து வாங்குகிறோம். சமையல் கழிவுநீர் உள்ளிட்டவற்றை மாடுகளுக்குக் கொடுப்பதில்லை. சுத்தமான கிணற்று நீரை மட்டுமே கொடுக்கிறோம். மாடுகளுக்கு கொடுக்கும் தீவனத்தைப் பொருத்துத்தான் பாலின் தரமும் இருக்கும்.  எனவே எங்கள் பண்ணைப் பாலை 24 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காவிட்டாலும், கெட்டுப் போகாது. இதுவே எங்கள் பண்ணைப் பாலின் சிறப்பாகும்.  இந்தப் பண்ணை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?  வீட்டில் பால் வழங்கும் நபரிடம் நல்ல பாலாகக் கொடுங்கள் என பலமுறை கூறினேன். அதற்கு அவர், ""நாங்கள் நல்ல பாலாகத்தான் தருகிறோம். நீங்களும் மாடு வாங்கி வளர்த்து பால் கறந்தால்தான் அதில் உள்ள சிரமங்கள் புரியும்'' என்றார். அந்த வார்த்தை என்னை உசுப்பிவிட்டது. பால் பண்ணை அமைத்தே தீருவது என ஆர்வத்துடன், முதலில் ஒரு ஜெர்ஸி இன மாடும், 3 ஹெச்.எப். இன மாடும் என நான்கு மாடுகள் ரூ. 1.60 லட்சம் செலவில் வாங்கினேன். தற்போது இப் பண்ணையில் சுமார் 60 மாடுகள் உள்ளன. இதில் 45 மாடுகள் பால் கொடுக்கின்றன.  மாடுகளை எப்படி பராமரிக்கிறீர்கள்?  தினசரி அதிகாலை சுமார் ஒரு மணிக்கு பால் கறக்கத் தொடங்குவோம். முடிந்ததும், உடனே மாட்டைக் குளிப்பாட்டி, காய்ந்த நாற்று உள்ளிட்டவற்றை உணவாகக் கொடுத்து, தண்ணீர் வைப்போம். பிற்பகலில் சுமார் ஒரு மணிக்கு பால் கறக்கத் தொடங்குவோம். இதையடுத்தும் மாடுகளுக்கு உணவு கொடுபோம். நோய் பாதுகாப்பு முக்கியமாகும். ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கால் காணை, வாய் காணை நோய் வரக்கூடும். எனவே, முன்னதாக தடுப்பூசி போட்டு விடுவோம். மாட்டுச் சாணம் மற்றும் நீரில் வித்தியாசம் தெரிந்தால், உடனே மாட்டு மருத்துவரை அழைத்துக் காண்பிப்போம். மஞ்சள் காமாலை, காய்ச்சல் ஏற்பட்டால் மாடுகள் உணவு எடுத்துக் கொள்ளாது. இதற்கும் மருத்துவரை அணுகி, அவரது அறிவுரைப்படி நடப்போம்.  நம் வீட்டில் பிள்ளைகளைப் பாதுகாப்பதுபோல மாடுகளையும் பாதுகாக்க வேண்டும். பருத்திக்கொட்டை, நயம் தவிடு உள்ளிட்டவற்றை மாடுகளுக்குக் கொடுப்போம். மாடு என்று அலட்சியமாக இல்லாமல் 24 மணி நேரமும் கண்காணிப்பு இருக்க வேண்டும்.  பால் விற்பனை எப்படி?  வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்கிறோம். மீதம் உள்ள பாலை கூட்டுறவு பால் பண்ணைக்கு கொடுத்துவிடுவோம்.  பால்பண்ணை வைக்க பயிற்சி அவசியமா?  பத்துக்கும் மேல் மாடுகள் இருந்தால் கண்டிப்பாக பயிற்சி அவசியமாகும். விருதுநகர் மாவட்ட தொழில் மையம் சார்பில் நடைபெற்ற பயிற்சி முகாமில் நான் பயிற்சி பெற்றேன். மேலும், மாட்டுத் தீவனம் தயாரிக்கும் ஒரு நிறுவனம் அளித்த பயிற்சி முகாமிலும் பயிற்சி பெற்றேன். கிராமங்களில் பலரை சந்தித்து அவர்களிடம் ஆலோசனை பெற்று வருகிறேன்.  இந்தப் பண்ணை குறித்து வேறு எதாவது கூற விரும்புகிறீர்களா?  நாங்கள் இயற்கை முறையில் மாடுகளுக்கு கருவூட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், இரு காளை மாடுகளை வளர்த்து வருகிறோம். மல்லாங்கிணறு, வெள்ளையாபுரம், எம்.புதுப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் அடிமாட்டு விற்பனையிலிருந்து மீட்டு 8 மாடுகள் வாங்கினேன். அவற்றை நன்கு பராமரித்து, பால்மாடாக மாற்றிவிட்டேன்.  பால் பொருள்களான பன்னீர், நெய் உள்ளிட்டவை தயாரிக்க உள்ளேன். மேலும், எனது நண்பர் ஒருவரிடம் சுமார் 22 ஏக்கர் தரிசு நிலம் குத்தகைக்கு எடுக்க உள்ளேன். அதில் இயற்கை முறை விவசாயமும், மாடுகளுக்குத் தேவையான கோ-4 என்ற புல் ரகமும் வளர்க்கத் திட்ட  மிட்டுள்ளேன். 


Share this article :

புதியவை

ஆடு வளர்ப்பு

மாடு வளர்ப்பு

Yoga

வாசனைப் பயிர்கள்

சேதனம்

ஒருங்கிணைந்த பண்ணை

 
Support : Copyright © 2017. life is a beautiful gift of god - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups