Home » » ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியாளர் பிரேமதாச அவர்களே விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார் - கருணா அம்மான்

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியாளர் பிரேமதாச அவர்களே விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார் - கருணா அம்மான்

இந்த நாட்டில் அனைவரும் அறிந்ததும் நிகழ்ந்து நிறைவேறியதுமான விடயங்களையே நான் கூறியிருந்தேன். அவ்வாறிருக்கையில் என்னை விமர்சிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க உட்பட எவருக்கும் அருகதையே இல்லை என்று தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
அண்மையில் நாவிதன்வெளியில் இடம்பெற்ற கூட்டத்தின்போது உரையாற்றிய கருணா அம்மான் தான் கொரோனவைவிட பயங்கரமானவர் என்றும் ஆணையிறவில் ஒரே இரவில் இரண்டாயிரம் மூவாயிரம் இராணுவத்தினரை கொலை செய்ததாகவும் கிளிநொச்சியிலும் அவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றதாகவும் கருத்து வெளியிட்டிருந்தார்.
இக்கருத்திற்கு தென்னிலங்கையில் பலத்த எதிர்ப்புக்கள் மேலெழுந்திருந்தன. குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க மற்றும் ருவான் விஜயவர்த்த உட்பட பௌத்த தேரர்களும் கடுமையான கண்டனத்தினை வெளிப்படுத்தியதோடு, அவரைக் கைது செய்யுமாறும் ஆணைக்குழு அமைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும் கோரியிருந்தனர்.
இவ்வாறு எதிர்ப்புக்கள் எழுந்துள்ளமை தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “நான் புதிதாக ஒன்றையும் கூறிவிடவில்லை. இந்த நாட்டில் கடந்த காலத்தில் நிகழ்ந்து நிறைவேறிய விடயங்களையே குறிப்பிட்டேன். விடுதலைப்புலிகள் அமைப்பு பலமாக இருந்த காலத்தில் அவ்விதமான சம்பவங்கள் இடம்பெற்றன. அதேபோன்று படைகளாலும் விடுதலைப்புலிகளுக்கு பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன. இதனை இலங்கையில் உள்ளவர்களும் சரி உலகத்தில் உள்ளவர்களும் சரி அறிந்தே கொண்டுள்ளனர்.
அந்த விடயங்களையே நான் கூறினேன். அதனை தற்போது தென்னிலங்கையில் சஜித், அநுர, நவீன், ருவான் போன்றவர்கள் தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தென்னிலங்கை மக்கள் அவ்விடயம் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. இதிலிருந்து தென்னிலங்கை மக்கள் எனது கருத்துக்கள் தொடர்பிலான புரிதலைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது வெளிப்பட்டுள்ளது.
மேலும் சஜித் பிரேமதாச ஒரு விடயத்தினை மறந்து விட்டார். அவருடைய தந்தையாரான ரணசிங்க பிரேமதாசவே 1989ஆம் ஆண்டு எமக்கு ஐயாயிரம் ரைபில் ரக துப்பாக்கிகளையும் ஒரு இலட்சம் ரவைகளையும் வழங்கினார். எமது போராட்டத்தின் ஆரம்பகாலத்தினை அவரே பலப்படுத்தினார்....
அதற்கு நானே சாட்சியாளனாக இருக்கின்றேன். அத்துடன், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு விடுதலைப்போராட்டம் பற்றியோ, அதில் இடம்பெற்ற மரணங்கள் பற்றியோ பேசுவதற்கு எவ்விதமான தகுதியும் கிடையாது. அவர்கள் தமது மக்களுக்கு எதிராக போராட்டத்தினை நடத்தி 80ஆயிரம் பேரின் உயிர்களை குடித்தவர்கள்.
அவ்வாறானவருக்கு என்னை விமர்சனம் செய்வதற்கு என்ன தகுதி இருக்கின்றது? இதுபோன்றுதான் ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாறு தெரியாது, நேந்றுப் பெய்த மழையில் முழைத்த களான்களாக இருக்கும் பரம்பரை அரசியல் வாரிசுகள் முதலில் ஐ.தே.கவினதும் தலைவர்களினதும் வரலாற்றினை முழுமையாக படித்துவிட்டு வருமாறு கூறுகின்றேன்” என மேலும் தெரிவித்தார்..
Share this article :

உள்ளூர் செய்திகள்

பாரத செய்திகள்

உலக செய்திகள்

கல்வி

விளையாட்டுச்செய்திகள்

புலம்பெயர் செய்திகள்

அரசியல்

ஏனைய செய்திகள்

 
Copyright © 2014. Thentral 🌍 Tamil Online News, Breaking News. - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups